பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீஃப், பெனாசிர் புட்டோ ஆகியோருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"பொதுத் தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்காது என்று பெனாசிர், நவாஸ் இருவருமே குற்றம்சாற்றி உள்ள நிலையில், அவர்கள் தேர்தலில் பங்கேற்பது முறையாகாது" என்றார்.
மேலும், "தனது சுயநலத்திற்காகப் பதவி நீக்கம் செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்த முஷாரஃப் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களை ஏமாற்றுவற்காக முஷாரஃப் நடத்தும் தேர்தலை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்" என்றும் இம்ரான் கான் கோரிக்கை விடுத்தார்.