காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும், நடவடிக்கையும் ஐ.நா.தீர்மானங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளில் மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் அந்த பகுதியில் வாழும் மக்களின் அபிலாஷைகளும், கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும் என்று நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளார். இந்த அடிப்படையில் அயலுறவுக் கொள்கை திருத்தி அமைக்கப்படும். அது இரு நாடுகளிடையே நல்லுறவு நிலவும் சூழ்நிலையில் வணிக, பொருளாதார வளர்ச்சி இரு நாடுகளுக்கும் பயன்தரத் தக்கவகையில் மிகப் பெரிய அளவுக்கு வளர்ச்சி பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதிபர் பர்வேஸ் முஷாரஃப், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக எடுத்து வைக்கும் எந்த அடிக்கும்,எந்த சூழ்நிலையிலும் அவருக்கு பாதுகாப்பு அளித்துவிடக் கூடாது என்று நவாஸ் ஷெரிஃப் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசீர் பூட்டோவுக்கும், ஜே.யு.ஐ-எப். தலைவர் மவுலானா பேஷலுரு ரெகமானையும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் தற்போது முக்கியமான காலக்கட்டத்தில் உள்ளதாகவும், அனைவரும் இணைந்து செயல்பட்டால் ஒரு புதிய வரலாற்றை எழுதமுடியும். அது 21 -ம் நூற்றாண்டின் மனித நாகரிகத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைஉருவாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு நம்மிடம் உள்ள சக்திகள் குறித்து திட்டமிக்கூடிய தருணம் இது என்றும், பாகிஸ்தானின் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை அடிப்படையில்ஒருமித்த உணர்வுடன் வரைவுத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றார்.
இதற்காக தேசிய அளவில் மறு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அரசியல் கட்சிகள் தவிர்த்து இந்த நடவடிக்கையில் நீதித்துறை, அதிகாரிகள், வணிகர்கள், ஊடகங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உலிமாக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பொது மக்கள் அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்று தமது கட்சி கருதுவதாகவும் கூறியுள்ளார்.
அவ்வப்போது இராணுவம் நிர்வாகத்தில் தலையீடுவது அதிகரித்து வருவதால் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகப் பெரிய இடைஞ்சலாக உள்ளதாக கூறினார். இந்த நிலை தொடருவது பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு, ஒருமித்த நிலையை எட்ட இயலவில்லை என்றும் அவர் குற்றம் சாற்றியுள்ளார்.
நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை ஜனநாயகத்தின் மூன்று முக்கியத் தூண்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், இவை கடந்த 8 ஆண்டுகளாக கடுமையாக செயலிலக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம் சார்ந்த துறைகளின் முக்கிய பொறுப்பில் ஓய்வு பெற்ற அல்லது தற்போது பணியில் உள்ள இராணுவத்தைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு அவர்கள் இன்றளவும் தொடர்ந்து பணியில் நீடித்து வருவதாகவும் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளார்.
இராணுவம் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டதை நியாயப்படுத்தவும், இராணுவ நடவடிக்கைக்கு எதிராக வலிமையான மாற்று அரசியல் சக்தி உருவாவதை துடுத்து நிறுத்தும் நோக்கத்துடனும், இராணுவம் தொடர்ந்து அரசியல் கட்சிகள்மீதும், தலைவர்கள் மீதும் அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், சனநாயக, பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்த அதிபர் முஷாரஃபின் செயல் முற்றிலும் தவறானது என்று அவர் வெளிப்படையாகவே குற்றம் சாற்றியுள்ளார்.
கடந்த 1999 -ம் ஆண்டு அவசர நிலையை பிரகடணம் செய்தபோது முஷாரஃப்பால் அறிவிக்கப்பட்ட 7 திட்டங்களில் ஒன்றைக் கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை, ஒட்டுமொத்தத்தில் முஷாரப் தோல்வியைத் தான் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த எட்டு ஆண்டுகளில் விலையேற்றம், வேலையின்மை, வறுமை ஆகியவை அதிகரித்துள்ளதாகவும், பாகிஸ்தான் வரலாற்றில் முன் எப்போதும் இருந்திராத அளவுக்கு அரசு நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு கடுமையான அளவுக்கு சீர்கேடு அடைந்திருப்பதாகவும் நவாஸ் ஷெரிஃப் குற்றம் சாற்றியுள்ளார்.