அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவர்கள் இருவரின் இறப்பிற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவதாக இந்தியத் தூதர் ரோனன் சென் கூறியுள்ளார்.
லூசியானா பல்கலைக் கழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த சந்திரசேகர ரெட்டி, கிரண் குமார் ஆகிய 2 இந்திய மாணவர்களின் குடும்பத்திற்கும், இந்தியத் தூதரகம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் விடுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த 14 ஆம் தேதி நடந்த இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்ததும், ஹூஸ்டனில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி லூசியானா பல்கலைக் கழகத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்டறிந்தார்.
வாஷிங்டனில் உள்ள தூதரக அதிகாரிகள் கே.பி.பிள்ளை, அலோக் பாந்தே ஆகியோரும் பல்கலைக் கழகத்திற்கு விரைந்துள்ளனர். காவல்துறையினரும், இந்திய- அமெரிக்கச் சமூகத்தினரும் தங்களால் இயன்ற எல்லா ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிகழ்வு தொடர்பாக அமெரிக்க காவல்துறை மற்றும் பல்கலைக் கழக அதிகாரிகள் பங்கேற்கும் முறையான விளக்கக் கூட்டம் இன்று காலை நடக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொலை நடந்த இடத்திலிருந்து ஓடியதாகக் கருதப்படும் 3 பேரைப் பிடிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று பல்கலைக் கழக செய்தி தொடர்பாளர் சார்லஸ் ஜீவே தெரிவித்தார்.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பாபி ஜிந்தால் லூசியானா மாநில ஆளுநராக வெற்றி பெற்றதைக் கொண்டாடிய, லூசியானா பல்கலைக் கழக மாணவர்கள் தற்போது மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.