பாகிஸ்தான் பொதுத்தேர்தல் எந்தவிதமான முறைகேடுகளும் இல்லாமல் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் திட்டமிட்டதற்கு முன்னதாகவே அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
''தேர்தலை நேர்மையாக நடத்தும் வகையில் திட்டமிட்டபடி, வருகின்ற 15 ஆம் தேதி அவசர நிலை ரத்து செய்யப்படும். தேவைப்பட்டால் முன்னதாகவே ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சில முக்கிய எதிர்க் கட்சிகளுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றும், புறக்கணிக்க மாட்டோம் என்றும் மாறி மாறி பேசி வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் மோசடி செய்யும் கட்சிகள் நிச்சயமாகத் தோல்வியைச் சந்திக்கும். வெற்றிபெறும் கட்சியை நாங்கள் வாழ்த்துவோம்'' என்றார் முஷாரஃப்.
முன்னதாக, தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசிர் புட்டோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், தேர்தலில் பங்கேற்பது என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீஃப் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.