நவம்பர் 25 ஆம் தேதி நடந்த பேரணியின் போது மலேசிய காவல் அதிகாரி ஒருவரை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாற்றப்பட்ட 31 மலேசிய இந்தியர்களை பிணையில் விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது!
மலேசியாவில் தங்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 26 ஆம் தேதி பத்துகுகை முருகன் கோயிலிற்கு முன்னால் திரண்டு முழக்கமிட்ட மலேசிய இந்தியர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் பலரும் காயமுற்றனர். ஆனால் அந்த மோதலின் போது மலேசிய காவல் அதிகாரி ஒருவரை ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தாக்கி கொலை செய்ய முயன்றதாக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு ஷாம் அலாம் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கொலை முயற்சி குற்றம் சாற்றப்பட்ட 31 பேரையும் பிணையில் விடுவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி அஜீமா உமர், சட்டத்திற்குப் புறம்பாகக் கூடியது தேசத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்புடைய பிரச்சனையாததால், இது சாதாரணமான வழக்கு அல்ல என்றும், எனவே குற்றம் சாற்றப்பட்டவர்களை பிணையில் விடுவிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார்.
குற்றம் சாற்றப்பட்ட 31 பேருக்கும் பிணைய விடுதலை மறுக்கப்பட்டதால் வழக்கு முடிந்து இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும் வரை அவர்கள் சிறையிலேயே அடைபட்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றம் சாற்றப்பட்டவர்களுக்காக வாதிட்ட வழக்கறிஞர் ஜி.கே. கணேசன், இந்த வழக்கு விசாரணைக்காக தனது மற்ற பணிகளை ரத்து செய்வதாக கூறியது மட்டுமின்றி, நாளை முதலே விசாரணையைத் துவக்கலாம் என்று கூறினார். ஆனால், ஜனவரி 14 முதல் 18 ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அஜீமா உமர் கூறினார்.
இவ்வழக்கில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞரும், ஹின்டிரா·ப் அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவருமான பி. உதயகுமார், குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்னரே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு மலேசிய இந்தியர்களை மேலும் கோபமூட்டியுள்ளதாகக் கூறிய வழக்கறிஞர் உதயகுமார், ஏற்கனவே நெருக்கப்பட்டவர்கள் மேலும் நெருக்கப்பட முடியாத அளவிற்கு இதன்மூலம் நெக்கித் தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
அமர்வு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் மீது உயர் நீதிமன்றத்தில் மறு பரிசீலனை மனு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் கணேசன் கூறினார்.