''அல் காய்டா இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் மறைந்திருப்பதாக மிக உறுதியான தகவல்கள் கிடைக்குமானால் அமெரிக்க ராணுவத்தினர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து நேரடித் தாக்குதல் நடத்துவார்கள்'' என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக சி.என்.என். தொலைக்காட்சிக்கு ஜார்ஜ் புஷ் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் உறுதியளித்தபடி ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியதற்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன், பயங்கரவாத எதிர்ப்புப் போரில் முஷாரஃப்பின் ஒத்துழைப்புக்கு நன்றியும் தெரிவித்தார்.
''பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் காய்டா இயக்கத்தின் முக்கியமான நபர்கள் முஷாரஃப் தலைமையிலான ராணுத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்புப் போரில் பாகிஸ்தான் அளித்துவரும் பங்களிப்பு மகத்தானது.
பாகிஸ்தானில் வசிக்கும் பழங்குடியினரை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அல் காய்டா இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் அங்கு மறைந்திருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைக்குமானால், அமெரிக்க ராணுவத்தினர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குவார்கள்'' என்றார் முஷாரஃப்.
ஈரான் பற்றிய கேள்வியொன்றுக்கு பதிலளித்துள்ள புஷ், ஈரான் தலைவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்றார்.
ஈரான் தலைவர்களின் நடவடிக்கைகள் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பதாக இல்லை. ஒருவேளை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்துமானால் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்யும் என்றும் அவர் கூறினார்.