'மக்களின் மனதைப் புண்படுத்துவதாக இருந்தால் எனது சுயசரிதை வடிவ நாவலான 'விகாந்திதா' வில் உள்ள சர்ச்சைக்குரிய வரிகளை திரும்பப் பெறுகிறேன்' என்று வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பி.டி.ஐ. செய்தியாளரிடம் தொலைபேசியில் பேசிய தஸ்லிமா நஸ்ரீன், கடந்த 1980 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ராணுவ நடவடிக்கைகளால் மக்களின் மதசார்பற்ற தன்மை பாதிக்கப்பட்ட நினைவுகளின் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டு எழுதிய 'விகாந்திகா' நாவலில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை திரும்பப் பெறுகிறேன் என்றார்.
''மதசார்பற்ற குணங்களைச் சார்ந்திருக்கும் மக்களுக்கு ஆதரவாகத்தான் நான் அந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை.
இப்போது இந்தியாவில் உள்ள சிலர் தங்களுடைய உணர்வுகளை அந்தப் புத்தகம் புண்படுத்துகிறது என்று கூறியுள்ளனர். எனவே அந்த வரிகளை நான் திரும்பப் பெறுகிறேன்.
சர்ச்சைக்குரிய வரிகளுடன் அந்தப் புத்தகத்தை விற்க வேண்டாம் என்று நான் ஏற்கெனவே எனது பதிப்பாளரான மக்கள் புத்தகக் கழகத்தினரிடம் கூறிவிட்டேன்.
அடுத்த பதிப்பை வெளியிடும் போது சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கப்படும். மேலும், விற்பனைக்காக அனுப்பப்பட்ட 40 பிரதிகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன'' என்று தஸ்லிமா கூறியுள்ளார்.
இத்தகவலை பதிப்பகத்தின் செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தஸ்லிமா நஸ்ரீன் தற்போது ரகசியமான இடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.