சவுதி அரேபியாவில் நடந்த எரிவாயு குழாய் வெடிவிபத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 பேர் இந்தியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் ஹாவியா என்ற இடத்தில் அராம்கோ என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான எரிவாயு கிடங்கில் நடந்த பராமரிப்பு பணியின் போது எரிவாயு குழாய் ஒன்று திடீரென்று வெடித்துச் சிதறியது.
இதில் ஏராளமான தொழிலாளர்கள் உடல் கருகி பலியானார்கள். இதுவரை 38 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எல்லா உடல்களும் முழுமையாக கருகியுள்ளதால் அவற்றை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இறந்தவர்களில் படேல் பல்வான்ட் பிரபுபாய், முகமது ஹலீம், முகமது ஹூசைன் பதான், ஆசிஷ் ஹூசைன், பிஜூ கொளஞ்சேரி ஜார்ஜ் ஆகிய 6 பேர் இந்தியர்கள் என்று அராம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றவர்களின் உடல்கள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சோதனை முடிந்த பின்புதான் மற்ற விவரங்கள் தெரியவரும் என்று எரிவாயு நிறுவனத்தின் முதன்மைச் செயலர் அப்துல்லா ஜூமா கூறியுள்ளார்.