தமிழர் மறுவாழ்வுக் கழகத்தின் சொத்துகளை அமெரிக்கா முடக்கியுள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் உள்ள சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், ''பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதற்காக தமிழர் மறுவாழ்வுக் கழகத்தின் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
''கிளிநொச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மறுவாழ்வுக் கழகம் அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட 17 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.
இவ்வமைப்பு மனிதநேயம் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை கடந்த 1997 ஆம் ஆண்டிலிருந்து அயல்நாட்டுப் பயங்கரவாத அமைப்பாகவும் 2001 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேசப் பயங்கரவாத அமைப்பாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக தமிழர் மறுவாழ்வுக் கழகம் அதன் சர்வதேச இணையதளத்தின் வழியாக அமெரிக்காவில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனிதநேய அமைப்பாக உலகளவில் காட்டிக்கொள்ளப்பட்ட தமிழர் மறுவாழ்வுக் கழகம், சர்வதேச அளவில் சுனாமி மறுசீரமைப்பிற்காக திரட்டிய நிதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ராணுவ தளவாடங்கள், தொலைத் தொடர்பு உபகரணங்கள் கொள்முதல் செய்துள்ளதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
சுனாமி மறுசீரமைப்புப் பணிகளுக்காக, தமிழர் மறுவாழ்வுக் கழகம் சர்வதேச அளவில் திரட்டிய நிதி தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே பயங்கரவாத அமைப்புகளை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையின் அடிப்படையில், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்க நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது '' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.