பாகிஸ்தான் அரசின் 5 ஆண்டு ஆயுள்காலம் முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
ஜனவரி மாதம் நடக்கவுள்ள பொதுத் தேர்தல் வரை பொறுப்புகளை கவனிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசு உடனடியாகப் பதவியேற்றுக் கொண்டது.
பாகிஸ்தானில் வருகிற ஜனவரி மாதம் 9 ஆம் தேதிக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.
அதற்கேற்ற வகையில் நாடாளுமன்றம் நவம்பர் 15 ஆம் தேதியும், சட்ட மன்றங்கள் 20 ஆம் தேதியும் கலைக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அறிவிப்பை பிரதமர் சவ்கத் அஜீஸ் நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியிட்டார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஷெர் ஆஃப்கன் கூறினார்.
பின்னர் இடைக்கால அரசின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தலைவர் முகமதுமியான் சூம்ரோ பதவியேற்றுக் கொண்டார்.