பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் பிரகடணம் செய்யப்பட்டுள்ள அவசர நிலையைக் கைவிடக் கோரி அதிபர் முஷாரஃப்பை எதிர்த்தும் பேரணி நடத்த முயன்ற பெனாசிர் புட்டோ கைது செய்யப்பட்டு, லாகூரில் உள்ள அவரின் ஆதரவாளர் வீட்டில் சிறை வைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்யவேண்டும் என்று பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், 'பெனாசிர் கைது உத்தரவை அரசு விலக்கிக் கொண்டு விட்டது. பெனாசிரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால், அவரின் பாதுகாப்பு கருதி சில காவலர்கள் எப்போதும் உடன் இருப்பார்கள்' என்று காவல்துறை உயரதிகாரி ஜாகித் அப்பாஸ் கூறியுள்ளார்.
லாகூரில் பெனாசிர் சிறை வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டுவிட்டன. காவலர்கள் திரும்ப அழைக்கப்பட்டு விட்டனர்.
இதற்கிடையில், ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், ராணுவத் தளபதி பதவியைவிட்டு விலக வேண்டும் என்றும் முஷாரஃப்பை வலியுறுத்துவதற்காக அமெரிக்க அயலுறவு இணையமைச்சர் நெக்ரோபாண்டெ பாகிஸ்தானுக்கு வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.