ஈரானின் அணு சக்தித் திட்டங்கள் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் பேச்சு நடத்திய உயரதிகாரி ஒருவர் பிரிட்டனுக்கு உளவு சொன்னதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரானின் முன்னாள் அதிபர் முகமது கட்டாமி பதவியில் இருந்த காலத்தில் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் பேச்சு நடத்துவதற்காக உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அதில் முக்கிய உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் ஹூசைன் மெளசாவியன். இவர் கடந்த 2003 முதல் 2005 ஆம் ஆண்டு வரை அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக பேச்சு நடத்திவந்தார்.
பின்னர் அதிபர் பதவிக்கு வந்த முகமது அகமதுநிஜாத், தனது சந்தேகத்திற்கு உள்ளாகும் எல்லா அதிகாரிகளின் மீதும் அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக முகமது கட்டாமி அமைத்த உயர்மட்டக் குழுவில் உள்ள சில உறுப்பினர்கள், ஈரானின் எதிரிகளுக்கு அணுசக்தி திட்டங்கள் தொடர்பான ரகசியங்களை உளவு சொன்னதாக முகமது அகமதுநிஜாத் சந்தேகித்தார்.
இந்நிலையில், ஈரானில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு உளவு சொன்னார் என்று குற்றத்தின் பேரில் ஹூசைன் மெளசாவியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயல்நாடுகளைச் சேர்ந்த பல்வேறு உளவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்களுடன் பல்வேறு முக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் அவர்மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உடனடியாகக் கருத்து தெரிவிக்க பிரிட்டன் மறுத்துவிட்டது. இருந்தாலும் ஐரோப்பியாவைச் சேர்ந்த சில தூதர்களை மெளசாவியன் சந்தித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விரைவில் ஈரான் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள மெளசாவியனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.