பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஸ்வாத், சங்லா மாவட்டங்களில் தாலிபான்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் நடந்த பயங்கரமான மோதலில் 54 தாலிபான்கள், 11 பொதுமக்கள் உள்பட 65 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கன் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இவர்களை அல் காய்டா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தவறாகப் பயன்படுத்தி வருகின்றன.
எனவே பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பதிலுக்கு தாலிபான்களும் தாக்குவதால் பலர் பலியாகின்றனர்.
இந்நிலையில், சங்லா, ஸ்வாத் பகுதிகளில் ராணுவத்திற்கும், தாலிபான்களுக்கும் இடையில் பயங்கர மோதல் வெடித்தது. ஹெலிகாப்டர் உதவியுடன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 54 தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.
அதே நேரத்தில் 31 ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர் என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் சிராஜூதீன் கூறியுள்ளார். இதற்கிடையில் இருதரப்பினரும் தவறுதலாகத் தாக்கியதில் பொதுமக்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இன்று காலை முதல் ராணுவத்தினரின் ஹெலிகாப்டர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், மோதலில் கொல்லப்படும் நபர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான விவரங்கள் வெளியாவதற்கு ஏற்படும் தாமதம் குழப்பத்திற்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.