பாகிஸ்தானில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானுக்கு மரண தண்டனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
வீட்டுக்காவலில் இருந்து தப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
தெஹ்ரிக் இ இன்சாப் என்ற கட்சியை நடத்திவரும் இம்ரான் கான் மீது, மாணவர்களைப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறார் என்று குற்றம் சாற்றப்பட்டுள்ளது. எனவே, அவரின்மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழக்குகளின் விரிவான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டப்படி அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
''மாணவர்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அவர்களின் கல்வியை இம்ரான் கான் பாழாக்கிவிட்டார். சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் காரணமாகிவிட்டார்'' என்று காவல்துறை உயரதிகாரி அஃதாப் சீமா கூறியுள்ளார்.
முன்னதாக தான் பஞ்சாப் பல்கலைக் கழகத்திற்கு வந்ததன் காரணத்தை இம்ரான் கான் தொலைபேசியில் செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார்.
''சர்வாதிகாரி முஷாரஃப்பிற்கு எதிராகவும், அவரின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மாணவர்கள் நடத்திய பேரணிக்குத் தலைமை ஏற்பதற்காக நான் பல்கலைக்கழகத்திற்கு வந்தேன்.
ராணுவச் சர்வாதிகாரியின் காட்டுமிராண்டிப் படைக்கு எதிராக அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள் ஆகியோருடன் மாணவர்களையும் ஒன்று திரட்ட நான் விரும்பினேன்.
என்னைப் பொது இடத்தில் கைது செய்ய ராணுவத்தினர் விரும்பவில்லை. ஆனால் நான் எனது குறிக்கோளை அடைந்து விட்டேன். மாணவர் இயக்கத்தைத் தொடங்கி, அதற்கான பாதையையும் வகுத்துக் கொடுத்துவிட்டேன்'' என்றார் இம்ரான் கான்.