'அதிபர் முஷாரஃப் உறுதியளித்துள்ளபடி பொதுத் தேர்தல் நடந்தாலும், அவர் பதவியிலிருந்தால் அது வெளிப்படையாக இருக்காது' என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கூறியுள்ளார்.
லாகூரில் வீட்டுக் காவலில் உள்ள பெனாசிர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சுதந்திரமான களத்தில் ஆட்சியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் முஷாரஃப் மட்டும் செயல்படவுள்ளார். மற்ற தலைவர்கள் எல்லாம் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்து வேடிக்கை பார்க்கத்தான் முடியும்'' என்றார்.
அவசர நிலை பிரகடனத்தை விலக்கக் கோரி லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த மீண்டும் முயற்சிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
''வீட்டுக் காவலில் இருந்து எப்போது வெளியில் வருகிறேனோ அப்போது பேரணிநடத்துவேன். விடுதலைக்கான பேரணி கண்டிப்பாக நடைபெறும். அதைத் தடுப்பதற்கு அரசு செய்யும் தந்திரங்கள் எல்லாம் என்னை மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும்.
இது ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேரணி, பாகிஸ்தான் மக்களிடம் ஆட்சி அதிகாரத்தைத் திரும்ப ஒப்படைப்பதற்கு நடத்தப்படும் பேரணி'' என்றார் பெனாசிர்.