தென்ஆப்பிரிக்க நாடான சிலியில் நேற்று நள்ளிரவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2பேர் பலியானார்கள். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
சிலியின் தலைநகரம் சாண்டியாகோவிலிருந்து சுமார் 1600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுக நகரமான டோகோபில்லாவில் நேற்று நள்ளிரவு 12.45 மணிக்குக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மலைகளுக்குள் உருவான இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 ஆகப் பதிவானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின்போது இடிபாடுகளில் சிக்கி 88 வயது மூதாட்டி ஒருவர் உட்பட 2 பெண்கள் பலியாகி உள்ளனர். 7 குழந்தைகள், 89 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
டோகோபில்லாவில் சுமார் 6,200 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அந்நகரத்தின் மேயர் லூயிஸ் மோயினோ தெரிவித்துள்ளார். அருகில் உள்ள மரியா எலினா நகரத்தில் 20 விழுக்காடு கட்டடங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சுமார் 7 ஆயிரம் பேர் வீடுகளை இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பசுபிக் கடற்கரையில் உள்ள ஆன்டோஃபாகஸ்டா என்ற தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் நிலநடுக்கத்தின் தாக்கத்தை அதிகமாக உணர்ந்தனர். சுரங்கத்தின் வாயிலில் மண் மூடியதால், அவர்கள் வெளியே வருவதற்கு அஞ்சி சுரங்கத்திற்குள்ளேயே தங்கிவிட்டனர்.
சிலியின் வடக்கே உள்ள கலாமா, அரிகா நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் அங்குள்ள சுரங்கங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.