பாகிஸ்தானில் அவசர நிலையை நீக்குவது தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் நடவடிக்கைக்குழு விதித்திருந்த நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் ஏற்க இயலாது என்று பாகிஸ்தான் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் 5 நிபந்தனைகளையும் ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஒரு சில நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 9 உறுப்பினர் கொண்ட காமன் வெல்த் நாடுகளின் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவில் இடம் பெற்றுள்ள பெரிய நாடுகளுக்கு பாகிஸ்தானில் அவசரநிலை கொணர்ந்ததில் உள்ள சூழ்நிலை தெரியும் என்றும், ஆனால் அதிலுள்ள மற்ற சிறிய உறுப்பு நாடுகள் பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள பிரச்சனையின் உக்கிரத்தை உணரவில்லை என்று பாகிஸ்தான் அயலுறவுத் துறை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் நாடுகளின் தீர்மானம், பாகிஸ்தானின் அடிப்படை யதார்த்தங்களையும், எதிர்நோக்கும் சவால்களையும் கருத்தில் கொள்ளாமல் உள்ளது தெரிய வருகிறது என்றும், அரசியல் ஸ்திரத்தன்மையைக் காப்பாற்ற எடுத்து வரும் நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட்டு உள்ளதாகவும், தற்போது இங்கு நிலவும் அரசியல் சூழ்நிலைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாக இல்லை என்று பாகிஸ்தான் அயலுறவுத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஏன் இன்று உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் தீவிரவாதம், பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசு எடுத்து வரும் உறுதியான நடவடிக்கைகளையும், சூழ்நிலையையும் சர்வதேச நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ள படி பாகிஸ்தானில் ஜனநாயக வழிக்குத் திரும்ப தனது சுய பாதையில் செல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் நாட்டின் நலன், தேவையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய முடிவு என்றும், வெளியில் இருந்து செயற்கையாக நிர்ணயிக்கப்படும் எந்த காலக் கெடுவையும் தற்போது கடைபிடிக்க இயலாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் அமைச்சர்கள் நடவடிக்கைக் குழு பாகிஸ்தானுக்கு 5 நிபந்தனைகள் விதித்ததோடு, 10 நாட்கள் காலக்கெடுவும் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முஷாரஃப்பின் 2008, ஜனவரி 9 தேர்தல் அறிவிப்பை வரவேற்றுள்ள காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் நடவடிக்கைக்குழு, அவசரநிலையை விலக்கிக் கொள்ளாமல் நடத்தப்படும் தேர்தல் விளைவு, நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
அதேப் போன்று தேர்தலுக்கு முன்பு மக்கள், அரசியல் கட்சிகளின் அரசியல் சாசன உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், நீதித்துறையின் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டான் மெக் கின்னான் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து ஏன் பாகிஸ்தானை நீக்கவில்லை என்ற கேள்விக்கு, பாகிஸ்தான் மூச்சு வாங்கிக் கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து நிபந்தனைகளை நிறைவேற்ற பாகிஸ்தான் முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.
காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் நடவடிக்கைக் குழுவின் கூட்டம் அதன் தலைவர்கள் பங்கேற்பது தொடர்பாக வரும் 22-ஆம் தேதி கூட உள்ளது. அப்போது இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.