பொதுத் தேர்தல் அட்டவணையை முடிவு செய்வதற்காகவும், அரசியல் கட்சிகளுக்கான ஒழுங்கு விதிமுறைகளை உருவாக்குவதற்காகவும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று கூடுகிறது.
எல்லா அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் காசி முகமது ஃபரூக் தலைமை வகிப்பார் என்றுதேர்தல் ஆணையத்தின் செயலர் கன்வார் தில்சாத் கூறினார்.
வருகிற 15 ஆம் தேதி நாடாளுமன்றமும், 20 ஆம் தேதி மாநிலங்களின் சட்டமன்றங்களும் கலைக்கப்பட உள்ளன. அதற்குப் பிறகு பொதுத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதிக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிபர் முஷாரஃப் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர் பட்டியலில் நிறைய முறைகேடுகளைச் செய்துவிட்டார். எனவே தேர்தல் ஆணையத்தைக் கலைத்துவிட்டு புதிதாக அமைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ வலியுறுத்தியுள்ளார்.