பாகிஸ்தானில் அவசர நிலையை பிரகடனம் செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் அதிபர் முஷாரஃப்பிற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
அவசரநிலையை எதிர்த்து திக்கா இக்பால் என்பவர் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''முஷாரஃப் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றது தொடர்பான வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. அவசர நிலையை குடியரசு தலைவர்தான் பிரகடனம் செய்ய முடியும். எனவே அதிபராக இல்லாத முஷாரஃப் ராணுவத் தளபதி பதவியில் மட்டும் இருந்து கொண்டு அவசர நிலையைப் பிரகடனம் செய்தது செல்லாது'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து விளக்கமளிக்கும்படி முஷாரஃப்பிற்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு வருகின்ற 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்குப் புறம்பாக தான் அவசர நிலையைப் பிரகடனம் செய்யவில்லை என்றும், தேசத்தின் நலன் கருதித்தான் இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் முஷாரஃப் விளக்கமளித்திருந்தார்.