தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன என்றும் அவற்றை பயங்கரவாதிகள் கைப்பற்ற வாய்ப்பில்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் தற்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள அணு ஆயுதங்களுக்கு பாதுகாப்பில்லை என்று அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
உயர்மட்ட அதிகாரத்தில் இருக்கும் சில அதிகாரிகள் அல் காய்டா, தாலிபான் போன்ற பயங்கரவாதிகளுக்கு அணு ஆயுதங்களைத் தந்துவிடக் கூடும் என்று ஐ.நாவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஜான் போல்டன் உள்ளிட்ட பல அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கு பாகிஸ்தான் அயலுறவு அலுவலகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. “தாலிபான் அல்லது அல் காய்டா தொடர்புடைய பயங்கரவாதிகளின் கைகளில் அணு ஆயுதங்கள் சிக்குவதற்கு வாய்ப்பில்லை. அதற்குத் தகுந்தவாறு பலமட்டப் பாதுகாப்புகளுக்கு இடையில் அவை வைக்கப்பட்டுள்ளன“ என்று அயலுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக் தெரிவித்துள்ளார்.