''பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிருடன் எந்த வகையான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை'' என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முஷாரஃப், "பொதுத் தேர்தலை முன்னிட்டு பெனாசிருடன் எந்த வகையான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தையும் நான் செய்து கொள்ளவில்லை. பெனாசிர்தான் அடுத்த பிரதமர் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை" என்றார்.
"பெனாசிர்தான் அடுத்த பிரதமர் என்று தேர்தலுக்கு முன்னாள் எப்படி முடிவு செய்யமுடியும்? யார் உங்களுக்கு அப்படிச் சொன்னது?" என்று முஷாரஃப் கேள்வி எழுப்பியுள்ளார்.
"பெனாசிருக்கு பின்னால் சிலநூறு ஆதரவாளர்கள் மட்டுமே உள்ளனர். பாகிஸ்தானின் கிராமங்களில் வாழும் மக்கள்தான் அடுத்த பிரதமரைத் தேர்வு செய்பவர்களாக இருப்பார்கள்.
ஒருவேளை பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றிபெற்றால் பெனாசிர் பிரதமராவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதுவும் கூட மற்ற கட்சிகளின் வலிமையைப் பொறுத்துதான் நடக்கும்.
வருகின்ற பொதுத் தேர்தலில் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள்தான் தங்களின் எதிர்காலத் தலைமையைத் தேர்வு செய்ய வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டப்படி ஏற்கனவே இரண்டு முறை பிரதமராக இருந்தவர்கள் மூன்றாவது முறை பிரதமர் பதவியை வகிக்க முடியாது என்பதும், பெனாசிர் புட்டோ மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை வகிப்பதற்காக முஷாரஃப்புடன் ரகசியப் பேச்சு நடத்தினார் என்று செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.