பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசீர் இன்று காலை அவசர நிலையைக் கண்டித்து நடைபெற இருந்த பேரணியை தொடங்கி வைக்க செல்லும் முன்பு அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.
முன்னதாக அவர் பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப் போவதாக அதிபர் முஷாரப் அறிவித்துள்ளது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசீர் கூறும் போது, இந்த நடவடிக்கை போதுமானது இல்லை என்றார்.
அதிபராகவும், ராணுவ தளபதியாகவும் ஒரே நேரத்தில் பதவிவகிக்கும் முஷாரப்பைக் கண்டித்து நடைப்பெற்ற போராட்டத்தின் போது பேசிய அவர், தேர்தல் நடைபெறும் தேதி, அட்டவணை தொடர்பான தெளிவான அறிவிப்பும், இவற்றுடன் ராணுவ உடையை கழற்றும் நாளும் உறுதியாக அறிவிக்கப் படவேண்டும் என்று பெனாசீர் கூறினார்.
இந்த அறிவிப்பும் ஏற்கனவே வெளியான அறிவிப்புகளைப் போன்ற வெற்று அறிவிப்புகள் தான் என்று தெரிவித்த பெனாசீர், நவம்பர் 15-ஆம் தேதிக்குள் முஷாரப் தனது ராணுவ உடையைக் கழற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவசரநிலை பிரகடனம் நாட்டின் மரியாதையைக் சர்வதேச அளவில் குறைத்து உள்ளதாக தம்மை சந்திக்க வந்த சீனா, ஐக்கிய அரபு எமிரேட் பிரதிநிதிகளிடம் பெனாசீர் தெரிவித்திருந்தார்.
இன்று காலை பெனாசீரின் இல்லம் அமைந்துள்ள சாலை அதன் சுற்றுப் பகுதிகளில் கூடுதலாக காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து காவலர்கள் படையினருடன் நீதிபதி ஒருவர் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அவசரநிலையை உடனடியாக நீக்கிவிட்டு நேர்மையான முறையிலும் நியாயமான வகையிலும் தேர்தலை நடத்தா விட்டால் இன்று ராவல்பிண்டியில் நடைபெற இருக்கும் தேர்தல் பேரணி கோரிக்கையை வலியுறுத்தும் போராட்டமாக மாறும் என்று பெனாசீர் எச்சரித்திருந்தார் என்பதும், அவரின் வெகுசன போராட்டத்துக்கு ஆதரவு கிடைத்திருப்பதால் முஷாரப் இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே அதிபர் முஷாரப் உடனான உறவை பெனாசீர் கைவிடாத வரை அவர் நடத்த உள்ள 13ஆம் தேதி பேரணிக்கு ஆதரவு அளிக்க போவதில்லை என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ராணுவ உடையுடனோ, ராணுவ உடையை களைந்த பின்னரோ அதிபராக முஷாரப் நீடிப்பதை ஜனநாயகத்தில் எந்த கட்சியும் விரும்பவில்லை என்று நவாஸ் ஷெரீஃப் கட்சியின் மூத்த தலைவர்கள் இஷாக் தர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பெனாசீர் கைது செய்யப்பட்டுள்ளதால் நவாஸ் ஷெரீஃப் கட்சியின் முடிவில் மாற்றம் ஏற்படுமா? என்று பாகிஸ்தான் அரசியல் வட்டாரங்கள் எதிர்நோக்கியுள்ளன.