இலங்கையில் தற்பொழுது நடைமுறையில் உள்ள அவசரநிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதுதொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வந்தபோது 121 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் ஆதரவுக் கட்சிகளைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள் மட்டும் அவசரநிலையை நீட்டிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் கொழும்பில் அவரின் இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டார்.அப்போது நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. பின்னர் ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்று அவசரநிலை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தமாதம் அவசரநிலை நீட்டிப்பு சட்ட வரைவை முன்மொழிந்த மூத்த கேபினட் அமைச்சர் நிமல் சிறிபல டி சில்வா, இனப் பிரச்சனையைத் தீர்க்க நிலையான அரசியல் சூழ்நிலை அவசியம் என்று வலியுறுத்தியதுடன், இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.