பாக்கிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் அருகில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.
பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பின் அலுவலகம், ராணுவத் தலைமையகம் ஆகியவை ராவல்பிண்டியில் உள்ளன. எனவே அங்கு கடுமையான பாதுகாப்பு எப்போதும் இருக்கும்.
இன்று காலை அங்குள்ள காவல்துறைச் சோதனைச் சாவடி அருகில் நடந்துவந்த தற்கொலைப்படை பயங்கரவாதி தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்துள்ளான்.
இத்தாக்குதலில் 2 காவலர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் படுகாயமடைந்தனர். இதை பாக்கிஸ்தான் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
முன்னதாக தலைநகர் இஸ்லாமாபாத் வழியாக மனித வெடிகுண்டுகள் நுழைந்துள்ளனர் என்று உளவுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.