சிறிலங்கா ராணுவத்துடன் நடந்த மோதல்களில் சுமார் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வடக்கு யாழ்பாணத்தில் உள்ள நாகர்கோவில் கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். 2 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. இதில் ராணுவத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை.
முகமலைப் பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய 4 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. இதில் புலிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் ராணுவத்தினர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் பலாலி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வன்னியில் உள்ள கரம்பிக்குளத்தில் முன்னேற முயன்ற விடுதலைப் புலிகளின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் புலிகளின் தரப்பில் கடுமையான சேதம் ஏற்பட்டது.
பின்னர் விடுதலைப் புலிகளின் தகவல் தொடர்பை இடைமறித்துக் கேட்டபோது, புலிகளில் 3 பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.