சம்ஜவ்தா விரைவு ரயிலில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக இதுவரை இந்தியா எந்தத் தகவலையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்று பாகிஸ்தான் குற்றம் சாற்றியுள்ளது.
கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி சம்ஜவ்தா - அட்டாரி சிறப்பு விரைவு ரயிலில் குண்டுகள் வெடித்தன.
இதில் இரண்டு பெட்டிகளில் இருந்த 68 பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் விவரங்கள் பாகிஸ்தானிடம் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் இதுவரை சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்தியா தங்களிடம் எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அயலுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு நிகழ்விலும் பாகிஸ்தானுக்குத் தொடர்பில்லை என்று அயலுறவு அலுவலகச் செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக் தெரிவித்துள்ளார்.
கடந்த 25-ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில், சார்க் நாடுகளில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு இடையில் மின்னணுத் தொடர்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், உலகிலேயே ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்திக்கு கடும் கண்டனத்தையும் முகமது சாதிக் தெரிவித்தார்.