பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பெனாசிர் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (PML-N) குடன் கூட்டணியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகத்தை விரும்பும் எந்தக் கட்சியுடனும் பேச்சைத் தொடங்க பாகிஸ்தான் மக்கள் கட்சி தயாராக உள்ளது என்று பெனாசிர் புட்டோ தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக இடைக்கால அரசை அமைக்கவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தன்னிடம் விவாதித்தது என்றும், ஆனால் அந்த இடைக்கால அரசின் பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் பெனாசிர் கூறினார்.
பாகிஸ்தானில் ஜனநாயகம் மீண்டும் மலர்வதை விரும்பாதவர்கள் தீவிரவாதத்தை காப்பாற்றுபவர்கள்தான். நாடு தற்போது கடுமையான பாதுகாப்புச் சிக்கலை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பதற்காகப் போராடும் சக்திகளுக்கு மக்கள் தங்களின் ஆதரவை அளிக்க வேண்டியது அவசியம் என்று பெனாசிர் கூறியதாக பாகிஸ்தான் நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.