வடக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த கடுமையான சண்டையில் தாலிபான்கள் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கனின் வடக்குப் பகுதியில் உள்ள உருஸ்கன் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த தாலிபான்கள் மீது அமெரிக்க படைகளும், ஆப்கன் ராணுவமும் இணைந்து இன்று தாக்குதல் நடத்தின.
இதில் 50க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டனர்; 13 பேர் கைது செய்யப்பட்டனர் என்று ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல் 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது என்று ராணுவ அதிகாரி ஆண்டனி தெரிவித்தார்.
இதற்கிடையில் ஹெல்மாண்ட் மாகாணத் தலைநகரான லஷ்கர் காவில் காரில் வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி காவலர்களைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
வடகிழக்கு ஆப்கனில் அல் கய்டா தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பவர்கள் என்ற சந்தேகத்திற்கு உள்ளானவர்கள் மீது அமெரிக்கா தலைமையிலான ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
நேற்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.