லண்டனின் மேயர் பதவிக்கு சிறிலங்காவைச் சேர்ந்த இளம் பெண் வழக்கறிஞர் தேர்வு செய்யப்படவுள்ளார். இப்பதவியை ஏற்கவுள்ள முதல் ஆசியப் பெண் என்ற பெருமையையும் அவர் பெறவுள்ளார்.
சிறிலங்காவைச் சேர்ந்த சாமிலி ஃபெர்ணான்டோ (வயது 28) என்ற இளம் பெண் வழக்கறிஞர். சுதந்திர ஜனநாயகக் கட்சி சார்பில் லண்டன் மேயர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவர் தற்போது ஃபின்ச்லே பகுதியில் வசிக்கிறார்.
அதேகட்சியைச் சேர்ந்த மற்றொரு வேட்பாளர் கென் லிவிங்ஸ்டோன், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் ஆகியோரை சாமிலி எளிதில் வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனின் மேயர் பதவி என்பது மிகவும் பொறுப்பு மிக்கதாகும். 10 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள நிதியைக் கட்டுப்படுத்திக் கையாளுதல் என்பது உள்ளிட்ட பல அதிகாரங்கள் உள்ளன.
மூத்த அரசியல்வாதிகளின் போட்டிகளைச் சமாளித்து விடுவீர்களா என்று கேட்டதற்கு, 'தினமும் நீதிமன்ற அறைகளில் மூத்த வழக்கறிஞர்களுடன் நடத்தப்படும் விவாதங்கள் என்னைத் தயார்படுத்தியுள்ளன' என்று சாமிலி பதிலளித்தார்.
பிரிட்டனில் இயங்கிவரும் புலம்பெயர்ந்த சிறிலங்கர்கள் அமைப்பில் சாமிலியின் பெற்றோர்கள் முக்கியப் பொறுப்புகளை வகிக்கின்றனர்.
சாமிலியின் தாய் வனிதா, 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் பயிற்சி பெற்றவர். தற்போது நீதிபதியாக பணியாற்றுகிறார். இவர் சிறிலங்காவைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு இந்தியாவில் பிறந்தவராவார்.
தந்தை சுமல் ஃபெர்ணான்டோ வழக்கறிஞராக உள்ளார். அவர் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் சிறிலங்கா நாட்டவர் என்ற அரசியல் வரலாற்றை உருவாக்கியவர் ஆவார். இவர் கிழக்கு சிறிலங்காவைச் சேர்ந்தவராவார்.