நாடு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிருக்கு 3,500 காவல்துறையினர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் 8 ஆண்டுக்கு பிறகு வரும் 18ஆம் தேதி நாடு திரும்புகிறார். அவரை வரவேற்க மக்கள் கட்சி தொண்டர்களும் தயாராகி வருகிறார்கள். பெனாசிர் மீதான ஊழல் வழக்குகளை அதிபர் முஷரப் அவசர சட்டம் மூலம் வாபஸ் பெற்று இருக்கிறார்.
பெனாசிர் நாடு திரும்பினால் அவரை கொலை செய்வோம் என்று பாகிஸ்தானில் உள்ள அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்தனர். இதற்காக தற்கொலை படையினர் தயார்நிலையில் இருப்பதாகவும் அவர்கள் அறிவித்து இருந்தனர்.
இதைதொடர்ந்து பெனாசிருக்கு பாதுகாப்பு கொடுக்க 3500 காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
கராச்சி விமான நிலையத்தை சுற்றி ராணுவம் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவோ இதர காரணங்களுக்காகவோ நான் நாடு திரும்புவதை ஒத்தி வைக்கமாட்டேன். திட்டமிட்டபடி 18ஆம் தேதி நாடு திரும்புவேன். இதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று பெனாசிர் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.