இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது நிலநடுக்கங்களை சந்தித்து வரும் இந்தோனேசிய மக்கள் பீதியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை 5.49 மணிக்கு தாக்கிய இந்த பூகம்பம், படாம் நகரிலிருந்து 129 கிலோ மீட்டர் தொலைவில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என இந்தோனேஷிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவான இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனாலும் சுனாமி பீதியில் பொதுமக்கள் வீடுகளைவிட்டு பீதியில் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
சுமத்ரா தீவில் கடந்த மாதம் தாக்கிய பூகம்பத்தில் சிக்கி 23 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.