வங்கதேசத்தில் உள்ள மேக்னா ஆற்றில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகு புயலில் சிக்கிக் கவிழ்ந்தது. இதில் 33 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மத்திய வங்கதேசத்தில் உள்ள ராய்ப்பூரா படகு தளத்தில் இருந்து 50 பயணிகளை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே புயலில் சிக்கிக் கொண்டது.
பிறகு பாதைமாறிய அந்தப் படகு நர்சிங்தி மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூரா துணை மண்டலப் பகுதியில் கவிழ்ந்தது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் நீரில் மூழ்கிய 33 பேரைக் காணவில்லை. பலமணி நேரம் தேடியும் கிடைக்காததால் அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சுவதாக காவல் துறை அதிகாரி தாரிக்குல் இஸ்லாமி கூறினார். இதுவரை 2 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக வங்கதேசத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தலைநகர் டாக்காவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.