சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு அயல் விவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது :
சிறிலங்கா அரசு இருபதாண்டு காலத்துக்கு மேலாக விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் போர் நடத்தி வருகிறது. இந்நிலையில்தான் அரசு மேற்கொள்ளும் கைதுகள், விசாரணைகள் ஆகியவை மனித உரிமை மீறல்களாக குற்றம் சாட்டப்படுகிறது. எந்த ஒரு வெளித்தரப்பினது வற்புறுத்தல் இல்லாமலே மனித உரிமைகளை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாத்து வருகிறது என்றார் அவர்.
இது தொடர்பாக சிறிலங்கா அயல் விவகார அமைச்சகத்தின் செயலாளர் பாலித கோகன்ன கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைப்பதால் பயங்கரவாதத்துக்கு எதிரான ஜனநாயக ரீதியான எங்களின் போராட்டம் திசை திருப்பப்பட்டு விடும் என்றார்.