சிறிலங்காவில் தமிழரின் இனப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை காண முடியாது என்று சிறிலங்காவின் அயல் விவகாரத்துறைச் செயலாளர் பலித கோகன்ன கூறியுள்ளார்.
ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை அவர் பேசியதாவது :
“நீண்டகால இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு சிறிலங்காவைச் சர்வதேச நாடுகள் வற்புறுத்த முடியாது. தமிழ் பிரிவினைவாதிகள் வன்முறையை மீண்டும் தொடங்கியுள்ள போதும் ஜனநாயக நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ள போதும் சிறிலங்கா அரசானது அனைத்துத் தரப்பினராலும் ஏற்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வைத் தேடிக் கொண்டிருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அணுகுமுறைக்கு சர்வதேச நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். மேலும் இனப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண முடியாது குறித்தும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசியல் வழித் தீர்வு என்பது ஜனநாயக ரீதியாக கவனமாக பொறுமையாக அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி உருவாக்குவதாகும்.
சிறிலங்கா அரசானது இராணுவ வழித்தீர்வை முன்வைப்பதாகக் கூறுவது கண்ணை மூடிக்கொண்டு விமர்சிப்பதாகும். அது உண்மையிலிருந்து வெகு தொலைவிலானது . இருப்பினும் அரசியல் வழித் தீர்வில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா அரசு அதே நேரத்தில் பயங்கரவாதத்தின் விருப்பங்களுக்கு உட்படாது.
2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் திட்டமிட்டு துஷ்ப்பிரயோகம் செய்துள்ளனர். தொடர்ந்த வன்முறைகளுக்கு தயார்படுத்த இந்த ஒப்பந்தத்தை அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்” என்றார் பாலித கோகென.