தென் ஆப்ரிக்காவில் கார்லெட்டோன்வில்லே பகுதிக்கு அருகில் உள்ள தங்கச் சுரங்கத்தில் மின்தூக்கி பழுதடைந்ததால் சுமார் 2,200 மீட்டர் ஆழத்தில் 3,000 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.
தென்னாப்பிரிக்காவில் கார்லெட்டோன்வில்லே பகுதிக்கு அருகில் உள்ள எலான்ட்ஸ்ரேண்ட் என்ற தங்கச் சுரங்கத்தில் சுமார் 3,200 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சுமார் 2,200 மீட்டர் ஆழத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை மேலே அழைத்து வருவதற்கு பயன்பட்டுவந்த முக்கியமான மின்தூக்கியில் இன்று அதிகாலை பழுது ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கத்தில் சிக்கினர். அவர்களில் சிலருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.
தகவலறிந்ததும் சுரங்கத்தின் பொறியாளர்கள் விரைந்துவந்து மின்தூக்கியைச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று சுரங்க அதிகாரிகள் கூறினர்.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மின்தூக்கிதான் பலத்த சேதமடைந்துள்ளது என்று சுரங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அமெலியா சோரெஸ் தெரிவித்தார்.
அதேநேரத்தில் மாற்று மின்தூக்கியில் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் 300 தொழிலாளர்களைத்தான் வெளியேற்ற முடியும். எனவே மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் சோரெஸ் கூறியுள்ளார்.
சுரங்கத்தின் அடியில் உள்ள தொழிலாளர்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேசிவருகின்றனர். தேவையான காற்றும், நீரும் வழங்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் அதிகாலை ஏற்பட்ட விபத்து பற்றி மாலை வரை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாற்றியுள்ளன.
அவசரகால வெளியேற்ற வழி நீண்டகாலமாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே இதுபோன்ற விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன என்றும் சங்கங்களின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.