அக்டோபர் 18ஆம் தேதி நாடு திரும்பத் திட்டமிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ, அன்று தான் கைது செய்யப்படாமல் தடுப்பதற்காக முன்ஜாமீன் பெறத் திட்டமிட்டுள்ளார் என்று நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1998 ஆம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறிய பெனாசீர் மீது ராவல்பிண்டி, லாகூர் நீதிமன்றங்களில் 3 ஊழல் வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளில் வாரண்ட் பெற்றுள்ள அதிகாரிகள் பெனாசீர் நாடு திரும்பும் போது அவரைக் கைது செய்யக்கூடும் என்பதால், அவர் சிந்து உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க உள்ளார் என்று டெய்லி ரிப்போர்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.
மேலும் வழக்குகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் லாகூர் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையில், பெனாசீரும் அவரின் குடும்பத்தினரும் பாகிஸ்தானில் பயணம் செய்வதற்காக 3 குண்டு துளைக்காத வாகனங்களை இறக்குமதி செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சிந்து உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சித்திக் நேற்றுத் தெரிவித்தார்.