அதிபர் தேர்தலில் போட்டியிடும் முஷாரப் வரும் 27ஆம் தேதி மனுத்தாக்கல் செய்கிறார் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) கட்சியின் தலைவர் ஷுஜாத் ஹுசேன் கூறினார்.
இஸ்லாமாபாத்தில் பிரதமர் சவுகத் அஜீஸை நேற்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) கட்சியின் தலைவர் ஷுஜாத் ஹுசேன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முஷாரப்பை மீண்டும் அதிபராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் வரும் 27ஆம் தேதி மனுத் தாக்கல் செய்கிறார் என்றார்.
முஷாரப்பை மீண்டும் அதிபராக தேர்வு செய்வதன் மூலம், பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி, பாதுகாப்பு அதிகரிக்கும் என்று தாம் நம்புவதாகவும் மேலும் அவர் கூறினார்.
பாகிஸ்தானில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ள தற்போதைய அதிபர் முஷாரப், பலுசிஸ்தான் நகரில் தனது தேர்தல் பிரசாரத்தை நாளை துவக்க திட்டமிட்டுள்ளார்.