சீனாவில் அண்மையில் வாத்துக்களிடையில் பரவிய பறவைக் காய்ச்சலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 10,000 வாத்துக்கள் கொல்லப்படவுள்ளன!
தெற்குச் சீனாவில் உள்ள காங்சூ நகரத்தில் கடந்த 5ஆம் தேதி பறவைக் காய்ச்சல் பரவியதில் 9,830 வாத்துக்கள் இறந்தன. வாத்துக்கள் இறக்கக் காரணம் பறவைக் காய்ச்சல்தான் என்று சீன வேளாண் அமைச்சகம் உறுதி செய்த பின்பு கடந்த 17 ஆம் தேதி வரை 36,130 வாத்துக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கொல்லப்பட்டன. இந்நிலையில் சிக்சியன் கிராமத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதாகக் கருதப்பட்ட பகுதியில் 10,000 வாத்துக்கள் கொல்லப்படவுள்ளதாக காங்சூ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
பறவை விற்பனைச் சந்தைகள் அருகில 13 மீட்டர் சுற்றளவில் குடியிருக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5 சதுர கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கட்டாயமாக தடுப்பு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. பறவைகள் இழப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நட்டஈடு வழங்கப்படும். அது எவ்வளவு என்று விரைவில் முடிவு செய்யப்படும் என்று உள்ளூர் நிருவாகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 50க்கும் மேற்பட்ட பண்ணை உரிமையாளர்களுக்கு மருத்துவ ஆய்வுகளும், இரத்தப் பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. பறவைக் காய்ச்சலைத் தடுப்பதற்காகவே கட்டுப்பாட்டு மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. காங்சூ பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 6 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகிலேயே மிகப்பெரிய வாத்து மற்றும் கோழி உற்பத்தியாளரான சீனா ஆண்டுதோறும் விலங்குகளைத் தாக்கும் நோய்கள் காரணமாக 53 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு இழப்பைச் சந்திக்கிறது.