பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகே உள்ள ராவல் பிண்டியில் அடுத்தடுத்து நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புகளில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7.20 மணிக்கு பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட முதல் குண்டு வெடிப்பில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குண்டு வெடிப்பில் சிக்கிய பேருந்து முற்றிலுமாக சேதமடைந்தது.
அடுத்து சந்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த குண்டு வெடித்ததில் மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.
ராவல்பிண்டியில் காசிம் சந்தைப்பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் குண்டு வெடித்ததாகவும், அடுத்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள ரா என்ற சந்தைப் பகுதியில் அடுத்த குண்டு வெடித்ததாகவும் காவல்துறை அதிகாரி மொஹம்மது ஹமீத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதியில் புகுந்த தீவிரவாதிகளை அழிக்க ராணுவம் மசூதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.