ஜப்பானின் ஒகினவா விமான நிலையத்தில் தரையிறங்கிய தைவான் நாட்டு விமானம் இறங்கிய சற்று நேரத்தில் வெடித்து தீப்பிடித்தது. எனினும் விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதால் உயிரிழப்பு ஏதுமில்லை.
விமானச் சிப்பந்திகள் 2 பேர் மட்டும் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தைவான் நாட்டின் சைனா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று தலைநகர் தைப்பேயில் இருந்து ஜப்பான் நாட்டின் ஒகினவா மாநிலத்தின் தலைநகர் நாகாவுக்கு வந்தது. விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
அந்த விமானம் விமான நிலையத்தில் தரை இறங்கியதும், விமானத்தின் இடது இறக்கைக்கு கீழே இருக்கும் முதல் என்ஜின் வெடித்தது. இதனால் விமானத்தில் தீ பிடித்தது.
விமானத்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்ததும் அதில் இருந்த பயணிகளும் விமானிகளும், சிப்பந்திகளும் விமானத்தை விட்டு இறங்கி விட்டனர். 2 சிப்பந்திகளுக்கு மட்டும் காயமேற்பட்டது. இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
தீ அணைப்பு படையினர் விரைந்து வந்து விமானத்தில் பற்றிய தீயை அணைக்க முயன்றும் தீ அணையவில்லை. விமானம் முழுவதும் தீக்கிரையானது.