பயங்கரவாதத்தையும் போதைப் பொருள் கடத்தலையும் ஒடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டறிக்கை விடுத்துள்ளன.
புதுடெல்லியில் நேற்றும் இன்றும் இரு நாடுகளின் உள்துறை செயலர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவது மட்டுமின்றி, இரு நாடுகளிலும் பதுங்கியிருக்கும் மற்ற குற்றவாளிகளையும் சட்டத்தின் பிடியில் கொண்டு வர ஒத்துழைப்பது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள், கள்ளப் பண புழக்கம் ஆகியவற்றைத் தடுக்க பாகிஸ்தானின் தேசிய புலனாய்வு அமைப்பும், இந்தியாவின் மத்திய புலனாய்வுக் கழகமும் (சி.பி.ஐ.) இணைந்து செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய - பாகிஸ்தான் கடல் எல்லையை மீறி மீன் பிடித்து கைதாகி இரு நாடுகளில் சிறைகளில் இருக்கும் மீனவர்களை ஆகஸ்ட் 14, 15ஆம் தேதிகளில் விடுவிப்பது எனவும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகு, மீன்பிடி வளைகள் ஆகியவற்றையும் ஒப்படைப்பது எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
மீனவர்கள் மட்டுமின்றி, இரு நாடுகளிலும் சிறையில் உள்ள மற்ற கைதிகளை, அவர்கள் தண்டனை பெற்ற குற்றவாளிகளாக இருப்பின், தண்டனைக் காலம் முடிந்துவிட்ட நிலையில் விடுவிப்பது எனவும் இந்த கூட்டறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
(யு.என்.ஐ.)