ஈராக்கில் அமெரிக்க வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல்வேறு குண்டு வெடிப்பு தாக்குதல்களில் ஒரே நாளில் மட்டும் 9 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்!
நேற்று, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சாலையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்கள் வாகனம் சிக்கியதில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமுற்றார்.
இதேபோல, பாக்தாத்தின் மற்றொரு பகுதியில் மற்றொரு சாலையோர குண்டு வெடித்ததில் 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும், திக்ரித்தில் அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் மேலும் 2 அமெரி்க்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு குண்டுவெடிப்புகளில் சிக்கி 30 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரை 79 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.