1985ஆம் ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் இருந்து இந்தியாவிற்கு பறந்த ஏர் இந்தியா கனிஷ்கா விமானம் நடுவானில் வெடித்துச் சிதறிய வழக்கில் சாட்சியமளிக்க முன் வந்த இரண்டு பேர் பாதுகாப்புக் காரணங்களைக் கூறி விசாரணைக்கு வர மறுத்துள்ளனர்.
அட்லாண்டிக் கடலின் மீது பறந்து கொண்டிருந்த போது கனிஷ்கா விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. அதில் விமானிகள் உட்பட பயணம் செய்த 331 பேரும் உயிரிழந்தனர்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளால் சதித்திட்டம் தீட்டப்பட்டு தகர்க்கப்பட்ட கனிஷ்கா விமான வழக்கை விசாரித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் விசாரணை ஆணையர் நீதிபதி மேஜர் முன்பு, ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறியபோது ஏற்பட்ட அதிர்வை தாங்கள் உணர்ந்ததை விசாரணை ஆணையத்திடம் நேற்று சாட்சியமாக கூற இரண்டு பேர் சம்மதித்திருந்தனர்.
ஆனால், அவர்கள் விசாரணைக்கு வரவில்லை. இவ்வழக்கில் சாட்சியமளித்தால் அதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுவதால் விசாரணைக்கு வர அவர்கள் மறுத்துவிட்டதாக நீதிபதி மேஜர் கூறியுள்ளார்.
நேற்று சாட்சியமளிக்க முன்வந்த மற்றொருவர் இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரும் வரவில்லை.
சாட்சியமளிக்க முன்வருவோருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று உறுதியளிக்கக் கூடிய நிலையில் விசாரணை ஆணையம் இல்லை என்பது மட்டுமின்றி, அவர்களுடைய சாட்சியத்தை ரகசியமாக காப்பாற்ற முடியும் என்ற உறுதியைக் கூட தங்களால் அளிக்க முடியாத நிலை உள்ளது என்று நீதிபதி மேஜர் கூறியுள்ளார்.
கனடாவின் டோரன்டோ நகரில் நீதிபதி மேஜர் விசாரணை ஆணையம் இதுவரை 44 நாட்கள் விசாரணை நடத்தி 113 சாட்சியங்களை பதிவு செய்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தின் அடுத்த விசாரணை செப்டம்பரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஆணையம் முன்பு சாட்சியமளிக்க முன்வந்தவர்கள் எல்லாம் தாங்களாகவே விருப்பப்பட்டு சாட்சி கூற வந்தவர்களாதலால் அவர்களை கட்டாயமாக சாட்சியமளிக்க வருமாறு தாக்கீது அனுப்ப இயலாது என்று விசாரணை ஆணையத்தின் தலைமை வழக்கறிஞர் மார்க் ஃப்ரீமேன் கூறியுள்ளார்.
(பி.டி.ஐ.)