பாகிஸ்தானில் தற்பொழுது நிலவும் சூழ்நிலையில் தான் அங்கு செல்வதால் மேலும் சிக்கல்கள் உருவாகலாம் என்றும், எனவே குறுகிய எதிர்காலத்தில் தான் பாகிஸ்தான் செல்லப் போதில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்!
ஜி-8 மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு டெல்லி திரும்புகையில் விமானத்தில் தன்னோடு பயணித்த செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், "நான் பாகிஸ்தான் செல்வதற்கு விரும்புகிறேன். ஆனால் அதிபர் முஷாரஃப் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அதனை மேலும் சிக்கலாக்க விரும்பபில்லை" என்று கூறினார்.
காஷ்மீர் உள்ளிட்ட இருதரப்பு பிரச்சனைகளுக்குத் தீர்வாக முஷாரஃபுடன் இந்தியா கையெழுத்திடும் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க முடியாது என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளதை ஏற்க முடியாது என்று கூறிய மன்மோகன் சிங், அங்கு யார் ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்களோ அவர்களோடு நிச்சயம் பேசுவோம் என்று கூறினார். (பி.டி.ஐ.)