வண்டலூரில் பிறந்த நெருப்புக் கோழி பராமரிப்பு
, வியாழன், 6 பிப்ரவரி 2014 (20:25 IST)
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அண்மையில் பிறந்த நெருப்புக் கோழியை தனி இடத்தில் வைத்து பராமரித்து வருவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பூங்கா இயக்குநர் ரெட்டி வெளியிட்ட செய்தி:-கடந்த 2008-ஆம் ஆண்டில் காட்டுப்பாக்கத்தில் இருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் நெருப்புக் கோழிகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. அதில் பெண் நெருப்புக் கோழி 6 முட்டைகளை இட்டது.அதில், 2 முட்டைகளில் இருந்து மட்டுமே கடந்த 23-ஆம் தேதி குஞ்சுகள் பொறித்தன. அதில் ஒரு குஞ்சு, ஆண் நெருப்புக் கோழியின் கால்களில் மிதிபட்டு பலத்த காயம் அடைந்தது.மீதமுள்ள ஒரு நெருப்புக் கோழி குஞ்சைக் காப்பாற்றுவதற்காக, வனவிலங்கு மருத்துவமனையில் அது பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு நெருப்புக் கோழி குஞ்சுக்காக பிரத்யேக அறை ஒதுக்கப்பட்டு, உணவாக குருணை தீவனம் மற்றும் கீரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்த நெருப்புக் கோழியின் எடை 1.5 கிலோவாக உள்ளது. என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.