சைபீரியாவில் உள்ள நில உறைபனி மற்றும் அதன் ஏரியில் உள்ள உறைபனி ஆகியவற்றின் அடியிலிருந்து மீத்தேன் வாயு பெருமளவு அண்டவெளியை நோக்கி கசிந்து வருவதாக ரஷ்ய விஞ்ஞானி நிகிடா சிமோவ் தனது நேரடி ஆய்வுத் தரவு மூலம் கண்டு பிடித்துள்ளார்.
தற்போது புவிவெப்பமடைதல் அதிகமாகி வருவதால் இப்பகுதிகளிலிருந்து மீத்தேன் வாயு வெளியேற்றம் வேகமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கரியமிலவாயுவைக் காட்டிலும் 23 மடங்கு சக்தி வாய்ந்த வெப்பவாயு மீத்தேன் ஆகும்.
இன்றைய யானையின் ஆதிகால அழிந்த புதைபடிவ விலங்கினக் காலக்கட்டம் முதல் பூமியின் பனியுறைப் பகுதிகளின் அடியில் புதையுண்டிருக்கும் கரியமில வாயுவின் அளவு 1.5மில்லியன் ட்ரில்லியன்.
வான்மண்டலம் நோக்கி இந்தக் கரியமில வாயு வெளியேறும் காலக்கட்டத்தில் நாம் இருப்பதால் இதனை வானிலை அணுகுண்டு என்றே விஞ்ஞானிகள் வர்ணிக்கின்றனர்.
சைபீரியாவின் உறைபனியில் புதையுண்டுள்ள கரியமிலவாயுவின் அளவு பூமியின் ஒட்டுமொத்த மழைக்காடுகளின் அளவு என்று ரஷ்ய விஞ்ஞானி சிமோவ் மற்றொரு குண்டைத்தூக்கிப் போட்டுள்ளார்.
துருவப் பகுதிகளில் வெப்பமடைதல் அதிகமாகி வருகிறது. ஒரு சாதாரணமான வெப்பநிலை அதிகரிப்பும் கூட கிரீன்லாந்து பனிமலைகள் உருகிவிடுவதற்கான சாத்தியங்களை பெருமளவு அதிகரித்து வருகிறது.
ஆர்க்டிக் நிலம் மற்றும் கடல்படுகையில் உள்ள உறைபனி வேகமாக உருகிவருகிறது.
இவையெல்லாம் நமக்கு தெரிந்த விஞ்ஞானத் தகவல்கள் என்றாலும் தற்போது அபாயமான மீத்தேன் வாயு வெளியேற்றம் புதிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது என்று கூறும் சிமோவ், 2007ஆம் ஆண்டு ஐ.நா.வின் வானிலை அறிக்கையில் மீத்தேன் வாயு வெளியேற்றம் பற்றிக் குறிப்பிடவில்லை என்று கூறுகிறார்.
"மீத்தேன் வாயு அங்கு உறங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் புலி எப்போது வேண்டுமானாலும் தட்டி எழுப்பப்படலாம்" என்று அமெரிக்க விஞ்ஞானியான ராபர்ட் காரல் என்பவரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவரும் பிற அமெரிக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் மீத்தேன் வாயுக் கசிவை கண்காணிக்க செயற்கைக் கோள் வசதி தேவை என்று அமெரிக்க அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆர்க்டிக் பகுதி அதிக கரியமிலவாயுவை உறிஞ்சுகிறது ஆனால் குறைவாகவே வெளியேற்றி வருகிறது. ஆனால் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைப் பொறுத்தவரை உலக அளவில் ஆர்க்டிக் பகுதி 9% பங்களிப்பு செய்துவருகிறது.
சைபீரிய ஏரிகளிலிருந்து மட்டும் 50 பில்லியன் டன்கள் மீத்தேன் வாயு வெளியேறலாம் என்று அலாஸ்கா பல்கலை சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் மெக்சிகோவில் நடைபெறும் ஐ.நா. வானிலை மாற்ற மாநாட்டில் இந்த எச்சரிக்கைகளும், ஆய்வுத் தரவுகளும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.