தேவயானி கோப்ரகடே ஒரு அசல் குற்றவாளி
, சனி, 21 டிசம்பர் 2013 (18:33 IST)
நாட்டை அமெரிக்காவின் சுரண்டலுக்கு திறந்துவிட்டிருக்கும் இந்திய அரசும், அதிகார வர்க்கமும், தேவயானி விவகாரத்தில் அமெரிக்க எதிர்ப்பு போர் நடத்துவது போல குமுறி கொந்தளிப்பது ஒரு மோசடித்தனம்.
தேவயானி கோப்ரகடேயின் தந்தை உத்தம் கோப்ரகடே மகாராஷ்டிரா மாநில இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். மும்பையில் பிறந்து வளர்ந்த தேவயானி மவுண்ட் கார்மல் பள்ளியில் படித்து சேத் ஜி எஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார். மருத்துவராக பணி புரிவதை விடுத்து, அவரது உறவினரான 1985 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி அஜய் எம் கோண்டானேவின் ஆதரவில் 1999 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.பாகிஸ்தான், இத்தாலி, ஜெர்மனி நாடுகளில் இந்திய தூதரகங்களின் அரசியல் பிரிவில் பணியாற்றிய பிறகு, பெரிதும் விரும்பப்படும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி நியமனம் பெற்றார்.2012
ஆம் ஆண்டு நியூயார்க்கில் இந்திய தூதரகத்தின் அரசியல், பொருளாதாரம், வணிகம் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான துணைத் தூதராக நியமிக்கப்பட்டதும், அங்கு தனக்கு வீட்டு வேலை செய்வதற்காக ஆள் தேட ஆரம்பித்திருக்கிறார் தேவயானி.சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண் மும்பையில் உள்ள தேவயானியின் வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார். அமெரிக்காவில் தனது வீட்டில் தங்கி குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் ஆள் தேடிக் கொண்டிருப்பதாகவும் ரூ.25,000 சம்பளமும், ரூ.5,000 ஓவர் டைம் ஊதியமாகவும் தருவதாக சொல்லியிருக்கிறார். சங்கீதாவின் வீட்டு வேலை செய்யும் திறனை மதிப்பிடும் விதமாக தேவயானி தனது வீட்டில் அவரை பல நாட்கள் வேலை வாங்கியிருக்கிறார்.தூதரக பாஸ்போர்ட் பெறப் போவதாக சொல்லி சங்கீதாவின் சாதாரண இந்திய பாஸ்போர்ட்டை தேவயானி வாங்கிக் கொண்டிருக்கிறார்.
அக்டோபர் (2012) மாதம் சங்கீதாவின் சார்பாக தேவயானி அனுப்பிய விசா விண்ணப்பத்தில், சங்கீதாவுடன் பேசியிருந்த சம்பளத்துக்கு மாறாக, வீட்டு வேலைகள் செய்வதற்கான மாதச் சம்பளமாக சங்கீதாவுக்கு $4,500 (ரூ.2,70,000) வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். நவம்பர் 1 ஆம் தேதி விசா நேர்முகத்துக்கு சென்ற சங்கீதாவிடம் பணி ஒப்பந்தம் முதலான ஆவணங்களை கொண்டு வரும்படி கூறியிருக்கிறார் அமெரிக்க தூதரக அதிகாரி.அமெரிக்க வெளியுறவுத் துறையின் விதிமுறைகளின் படி அமெரிக்காவில் பணிபுரிய நியமிக்கப்படும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் தமது தனிப்பட்ட ஊழியர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், அல்லது வேலையாட்களை அமெரிக்கா அழைத்து வருவதற்காக ஏ-3 விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்ப நடைமுறையின் போது வேலைக்கு அமர்த்தப்படுபவரை நேர்முகம் கண்டு, அவர் வேலை செய்யவிருக்கும் அமெரிக்க பகுதியில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக வாழ்வதற்கு போதுமான சம்பளம் அவருக்கு வழங்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.அதற்காக பணிக்கு அமர்த்தப்பபடுபவரும், பணிக்கு அமர்த்துபவரும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த ஒப்பந்தத்தில், என்ன வேலை செய்யப் போகிறார் (வீட்டு வேலை, தோட்ட வேலை, குழந்தைகளை பார்த்துக் கொள்ளுதல்) என்ற விபரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வேலை நேரத்தையும், ஒரு வாரத்துக்கு வேலை செய்யும் கால அளவையும் வரையறுத்திருக்க வேண்டும். வீட்டு வேலை செய்பவர்கள் வாரத்துக்கு 35 - 40 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரத்துக்கு குறைந்தது ஒரு நாள் விடுமுறையாக வழங்கப்பட வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுப்புகள், மருத்துவ விடுப்புகள், விடுமுறை விடுப்புகள் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.வேலைக்கான ஊதியம் அமெரிக்க மத்திய மற்றும் உள்ளூர் சட்டங்களின் படியான குறைந்த பட்ச ஊதியத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். தங்குமிடம், மருத்துவச் செலவு, மருத்துவக் காப்பீடு, பயணம், உணவு போன்றவற்றுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படக் கூடாது.வழக்கமான வேலை நேரத்துக்கு அதிகமாக வேலை செய்தால் அந்த நேரத்துக்கு ஓவர் டைம் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். சம்பளம் ஊழியரின் வங்கிக் கணக்கில் போடப்பட வேண்டும். அந்த வங்கிக் கணக்கை வேலை கொடுப்பவரோ அவரது குடும்ப உறுப்பினர்களோ கட்டுப்படுத்தக் கூடாது. ஊழியரின் பாஸ்போர்ட், பணி ஒப்பந்தம் முதலான எந்த ஆவணத்தையும் வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது.
இந்த விதிகளின்படி தேவயானி ஒரு பணி ஒப்பந்தத்தை தயாரித்திருக்கிறார். அதன்படி சங்கீதா வாரத்துக்கு 40 மணி நேரம் மட்டும் வேலை செய்வார் என்றும், ஒரு மணி நேர வேலைக்கு $9.75 ஊதியம் (நியூயார்க் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம்) வழங்கப்படும் என்றும் விசா நேர்முகத்தில் சொல்லுமாறு தேவயானி சங்கீதாவுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். வேலை நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மதியம் 12 வரை, மாலை 6.30 முதல் 8.30 வரை சனிக்கிழமைகளில் காலை 8.00 முதல் மதியம் 1 மணி வரை என்று சொல்ல வேண்டும். ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் விடுமுறை வழங்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.அமெரிக்க சட்டப்படி வழங்கப்பட வேண்டிய சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்கள், மருத்துவ விடுப்பு நாட்கள், ஆண்டு விடுமுறை விடுப்பு நாட்கள் போன்ற விபரங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. ரூ.30,000 சம்பளம் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் தேவயானி கூறியிருக்கிறார்.இந்த பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேர்முகத்திற்கு பிறகு நவம்பர் 14, 2012 அன்று அமெரிக்க தூதரகம் சங்கீதாவுக்கு விசா வழங்கியிருக்கிறது.நவம்பர் 23 ஆம் தேதி விமான நிலையத்துக்கு போவதற்கு முன்பு சங்கீதாவையும் அவரது கணவர் பிலிப்பையும் தனது வீட்டுக்கு அழைத்த தேவயானி சங்கீதாவை இன்னொரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட சொல்லியிருக்கிறார். அதன்படி சங்கீதாவுக்கு ரூ 25,000 மாதச் சம்பளமும், ஞாயிற்றுக்கிழமைகளிலும், கூடுதல் நேரங்களிலும் வேலை செய்வதற்கு ரூ.5,000 ஓவர்டைம் ஊதியமும் வழங்கப்படும். சம்பளமும் ஓவர்டைமும் சேர்த்து ரூ 30,000-ஐ தாண்டக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதைத் தவிர்த்து வேலை நேரம், வார வேலை நேர வரம்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்கள், விடுமுறை விடுப்பு நாட்கள் பற்றி இந்த ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.தூதரக விசா விதிகளின்படி இப்படி செய்வது அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமானது.
நவம்பர் 24 ஆம் தேதி தேவயானியும், சங்கீதாவும் நியூயார்க் போய் சேர்கின்றனர். நவம்பர் முதல் ஜூன் வரை தேவயானியின் வீட்டில் வேலை செய்த சங்கீதா 40 மணி நேர வரம்பை விட பெருமளவு அதிக நேரம் வேலை (ஒரு நாளுக்கு 18 மணி நேரம் வரை) செய்திருக்கிறார். அவருக்கு ஒத்துக் கொண்ட ரூ 30,000-ஐ விட குறைவாகவே சம்பளமே கொடுக்கப்பட்டிருக்கிறது. போகப்போக வேலைச் சுமையும், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காததும் தாங்க முடியாமல் ஆகியிருக்கிறது.
தனது வாராந்திர ஓய்வு நாளில் வெளியில் வேலை செய்யப் போவதாக அனுமதி கேட்டிருக்கிறார் சங்கீதா. "தூதரக விசா விதிகளின்படி அப்படி செய்வது அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமானது" என்று அதை தடை செய்திருக்கிறார் தேவயானி. தனக்கு சாதகமாக இருந்தால், அமெரிக்க சட்டங்களை மீறி குறைந்த சம்பளம் கொடுக்கலாம், அதிக நேரம் வேலை வாங்கலாம், விசா விண்ணப்பத்தில் பொய்யான தகவல்களை கொடுக்கலாம், அமெரிக்க தூதரக அதிகாரியிடம் பொய் சொல்லும்படி கற்றுக் கொடுக்கலாம். ஆனால், சங்கீதா ஒரு நாள் வெளியில் வேலை செய்தால் அமெரிக்க சட்டம் மீறப்பட்டு விடும் என்ற அவரது அக்கறை பச்சை சுயநலமே அன்றி வேறென்ன?
ஜூன் மாதம் பொருட்கள் வாங்க கடைக்குப் போன சங்கீதா வீட்டுக்குத் திரும்பவில்லை. ஜூலை 8 ஆம் தேதி சங்கீதா நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞரின் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்திய தூதரகத்திலிருந்து 4 அதிகாரிகள் அங்கு போய் சேர்ந்திருக்கின்றனர். பேச்சு வார்த்தையின் போது தான் செய்த வேலைக்கான சம்பளமாக ஒரு தொகையையும், தனது சாதாரண இந்திய பாஸ்போர்ட்டையும் தந்துவிடும்படி சங்கீதா கேட்டிருக்கிறார்.
இதற்கிடையில் தேவயானியின் தந்தையான ஐஏஎஸ் அதிகாரியின் செல்வாக்கில் இந்தியாவில் சங்கீதாவின் கணவர் பிலிப்பும் குழந்தையும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து அவர்களுடன் தொலைபேசியில் பேசிய சங்கீதா, வழக்கறிஞர் அலுவலகத்தை விட்டு போக மறுத்திருக்கிறார். இந்திய தூதரக அதிகாரிகள் அவர் வெளிவருவதை எதிர்பார்த்து காத்திருந்திருக்கின்றனர். பின்னர், அமெரிக்க காவல்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டு அவர்கள் சங்கீதாவை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அதே நாளில் இந்திய அரசு சங்கீதாவின் இந்திய பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறிவிட்ட அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் படி அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்தது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேவயானி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முறையீட்டின் அடிப்படையில் தேவயானிக்கு எதிராக இந்தியாவிற்கு வெளியில் எந்த வழக்கும் தொடரக் கூடாது என்று சங்கீதாவுக்கு தடை விதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. சங்கீதாவின் கணவர் பிலிப்புக்கும் சம்மன் அனுப்பியது நீதிமன்றம். சங்கீதா மீது இந்தியக் குற்றப் பிரிவு 387, 420 மற்றும் 120B-ன் கீழ் தெற்கு டெல்லி மாவட்டத்தின் மாநகர போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது வாரண்ட் பிறப்பித்தது. சங்கீதா இந்தியா திரும்பினால் அவர் உடனே கைது செய்யப்படுவார்.இதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு தேவயானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. நியூயார்க் நகரின் நீதித்துறை தலைவர் பிரீத் பராரா தேவயானியை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார். டிசம்பர் 12 ஆம் தேதி தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பும் போது, அவரை அமெரிக்க அரசு மார்ஷல்கள் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கின்றனர். தேவயானியை அவரது குழந்தைகள் முன்பு கைது செய்த்தாகவும், கை விலங்கு இட்டு அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. போதை மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடனும், பாலியல் குற்றவாளிகளுடனும் சேர்த்து வைத்திருந்ததாகவும், நிர்வாணமாக்கி சோதனை செய்ததாகவும் தேவயானி குற்றம்சாட்டியிருக்கிறார். தனக்கு தூதரக ஊழியர்களுக்கான விதி விலக்கு இருப்பதாக பல முறை கூறியும் அமெரிக்க அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை என்று தேவயானி கூறியிருக்கிறார்.