ஏன் இந்த பாரபட்சம்?
, சனி, 18 ஆகஸ்ட் 2012 (15:52 IST)
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி நீச்சல் குளத்தில் 4ஆம் வகுப்பு மாணவன் ரஞ்சன் மூழ்கி பலியான வழக்கில் இரவில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு ஏன் இப்படி பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி, பள்ளியின் பேருந்தில் இருந்த ஓட்டையில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானாள். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது இந்த சோக நிகழ்வு.
சிறுமி சுருதி பலியானது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமே தானாக முன் வந்து வழக்கை எடுத்து நடத்தியது. இதனாலேயே பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு இன்று வரை ஜாமீன் கிடைக்கவில்லை.இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் அருகே குன்னம் கிராமத்தில் உள்ள ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவன விளையாட்டரங்கு சரிந்து விழுந்து பத்து பேர் பலியான விவகாரம் தொடர்பாக, கல்லூரியின் தலைவர் ஜேப்பியாரை கடந்த 9ஆம் தேதி போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. அவருக்கும் இன்றுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த இரண்டு வழக்கிலும் ஜாமீன் கிடைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, ஏன், பத்ம சேஷாத்திரி பள்ளி மாணவன் ரஞ்சன் பலியானது தொடர்பாக பள்ளியின் நீச்சல் பயிற்சி மாஸ்டர் ராஜசேகரன், உடற்பயிற்சி மாஸ்டர் ரவிச்சந்திரன், நீச்சல் குள பொறுப்பாளர் ரெங்காரெட்டி, உதவியாளர் அருண்குமார், துப்புறவு தொழிலாளி ரவி ஆகியோருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட அனைவரும், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்திவிட்டு பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சீயோன் பள்ளி தாளாளர், ஜேப்பியாரை கைது செய்த காவல்துறை, பத்ம சேஷாத்திரி பள்ளி முதல்வரை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுந்தது. இதனால் தமிழக அரசு விழித்துக் கொண்டதோ அல்லது மக்களை ஏமாற்றவோ என்னவோ நேற்று இரவோடு இரவாக பத்ம சேஷாத்திரி பள்ளி முதல்வர் ஷீலாவை கைது செய்த காவல்துறை, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் மலர்விதி அவரை ஜாமீனில் விடுதலை செய்துவிட்டார்.தமிழக அரசின் இந்த நடவடிக்கை மக்களை ஏமாற்றும் வகையிலேயே இருக்கிறது. மாணவன் ரஞ்சனை இழந்த பெற்றோரின் கண்ணீர் சிந்தியதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. ஜாதிதான் தமிழக முதல்வரின் கண்ணில் பட்டதா? என்ற வினாவும் எழுகிறது.லட்சம் லட்சமாக கட்டணம் வசூலிக்கும் இதுபோன்ற தனியார் பள்ளிகள், மாணவர்களின் பாதுகாப்பில் எந்த அக்கறையும் செலுத்துவதில்லை என்பதையே இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றன.தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ள மாணவன் ரஞ்சன் வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பே நாளை இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே பலரின் ஏக்கம்.