இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசிடம் இருந்து நிர்பந்தம் ஏதும் வரவில்லை என்று சொன்ன இலங்கை அதிபர் ராஜபக்சவை உலக மகா பொய்யர் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் நடந்த உச்சக்கட்ட போரை நிறுத்தச் சொல்லி தமிழகத்தில் இருந்து ஒலித்த குரலை புறந்த தள்ளிய மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று அதிபர் ராஜபக்சவை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக காங்கிரஸ்காரர்கள் வேண்டுமானால் பீற்றிக் கொள்ளலாம். ஆனால் அப்படி எந்த வற்புறுத்தலும் செய்யவில்லை என்பது தமிழக மக்களுக்கு இது நன்கு தெரியும்.
முன்பு அயலுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, இப்போது இருக்கிற எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், அயலுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் உட்பட பல்வேறு உயர்மட்ட இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபக்சவை பலமுறை நேரில் சந்தித்தது எல்லாம் தமிழர்களை ஏமாற்றுவதற்காகவும், அப்போதைய தமிழக ஆட்சியாளர்களை திருப்திபடுத்துவற்காகவும்தான்.
லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொல்ல காரணமாக இருந்தது இந்திய அரசு என்பதை ஆணித்தரமாக கூறமுடியும். தனது கணவனை கொன்ற விடுதலைப்புலிகளை பழி தீர்க்கவே லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொல்ல காரணகர்த்தாவாக இருந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனைவி சோனியா காந்தி என்பதும் தெரியும்.
இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பியவர் அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி. அங்குள்ள அப்பாவி தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது இந்திய இராணுவம். இதற்கு காரணமான ராஜிவ் காந்தி பழிதீர்க்கப்பட்டார் என்பது ஒரு தரப்பினரின் வாதம்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983 ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான் என்று கூறியுள்ள தங்கபாலு, இன்றைய சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இலங்கைத் தமிழர்களுக்காக செய்தது என்ன என்பதே பலரது கேள்வியாகும். அவர்கள் செய்த சாதனை இலங்கையில் தமிழர்களை அழித்ததுதான்.
கடந்த 1984 - 89 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது 'இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு' என்று எனது உரையை பதிவு செய்ததாக கூறியிருக்கிறார் தங்கபாலு. அவர் பதிவு செய்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர் பதிவு செய்தது நிறைவேறியதா? அப்படியென்றால் உலக மகா பொய்யர் யார்? ராஜபக்சையா? தங்கபாலுவா? போர் உக்கிரமாக நடந்த 200ஆம் ஆண்டில் இந்த தங்கபாலு எங்கே போனார்?
ராஜபக்ச மகா மெகா பொய்யர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்போது, இப்போதுதான் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு தெரிகிறதாம்.
இப்படி அறிக்கைகள் விட்டு தமிழக மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு அது ஏமாற்றமாகவே முடியும். சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்து தமிழகத்தில் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போகும் நிலை வெகுதூரத்தில் இல்லை.
தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்று ராஜபக்ச சொல்வதுதான் உண்மை. இதில் காங்கிரஸ்தான் உலக மகா பொய்யை சொல்கிறது.
அண்மையில் இலங்கைக்கு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன், அதற்கு முன்பு தமிழக முதலமைச்சரை ஜெயலலிதாவை சந்தித்து பேசிவிட்டு சென்றவர் சென்றவர்தான். திரும்பி வந்தவர் ஜெயலலிதாவை சந்திக்காமலேயே டெல்லிக்கு சென்றுவிட்டார்.
டெல்லி சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப வேண்டும். தமிழர்கள் பற்றி இலங்கை தெரிவிக்கும் தகவல் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாகவும், முகாம்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை பற்றி சரியான தகவல் தெரிந்தாக வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இலங்கை தமிழர்களுக்காக பல அதிரடி நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் நாங்கள் தான் என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் இதுவரை இலங்கை தமிழர்களுக்காக செய்தது என்ன? செய்தது ஒன்றே ஒன்றுதான் படுகொலைக்குத் துணை போனது, அதை மறைக்க, நாங்கள் தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டுள்ளோம் என்று துணிந்து கூறும் பொய்யும், புரட்டும்தான்.