Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போர்க் குற்றத் தீர்மானம் எங்களுக்கு கொழுக்கொம்பு: சிறீதரன் எம்.பி.

நேர்காணல் : கா. அய்யநாதன்

போர்க் குற்றத் தீர்மானம் எங்களுக்கு கொழுக்கொம்பு: சிறீதரன் எம்.பி.
, வியாழன், 8 செப்டம்பர் 2011 (19:51 IST)
FILE
ஈ.ழத் தமிழினத்தை இனப்படுகொலை செய்த இலங்கை அரசையும், அதன் ஆட்சியாளர்ளையும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் தங்கள் இனத்திற்கு அரசியல் உரிமையை பெற்றுதரும் கொழுக்கொம்பு என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞ்ஞானம் சிறீதரன் கூறினார்.

சென்னை வந்த சிறீதரன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியபோது, தமிழினத்திற்கு விடிவுத் தேடித் தரும் இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

“இலங்கை ஆட்சியாளர்களை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற இத்தீர்மானம்தான் எங்களுக்குக் கிடைத்த கொழுக்கொம்பாக உள்ளது. இதைக் கொண்டுதான் எமது மக்களின் உரிமைக்கும், உயர்வுக்ககும் வழிவகுக்க வேண்டும்” என்று சிறீதரன் கூறினார்.

தமிழர்களின் பாரம்பரிய பூமியான இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிய பின்னரும் எப்படிப்பட்ட சூழல் நிலவுகிறது என்பதை சிறீதரன் விரிவாக எடுத்துக் கூறினார்.

பாலியல் கொடுமைக்கு பலியாகின்றோம்

“இன்று கூட நாங்கள் செத்துக்கொண்டிருக்கின்றோம். எமது பெண்கள் 5 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அவ்வாறு கொல்லப்பட்ட 5 பெண்களின் உடலை எனது தொகுதியைச் சார்ந்த பகுதி ஒன்றில் இருந்து வெளியே எடுத்தனர். அதனை அங்கேயே சிங்கள இராணுவத்தினர் கொளுத்திவிட முயன்றனர். நான் அங்கு சென்று தடுத்து நிறுத்தினேன். என்னைக் கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டினர். நான் நீதிமன்றத்திற்குச் சென்று உத்தரவைப் பெற்று காவல் துறையினரை அழைத்துவந்து சடலங்களை எடுத்துக் கொண்டு சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவர்கள் யாவரும் பாலியல் வல்லுறவுக்குப் பின் கொல்லப்பட்டுள்ளனர்.

குழியில் இருந்து எடுத்த அந்த உடலங்களுக்கு புலிகளின் உடைகளுக்கும் திணித்து அவர்களை போராளிகள் என்று காட்ட இராணுவத்தினர் முயன்றனர், நாங்கள் அம்முயற்சியை தடுத்து நிறுத்தினோம்.

இரணைமாதா நகர் என்ற இடத்தில் 15 வயதிற்கும் உட்பட்ட 16 பெண்கள் இராணுவத்தினரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கருவுற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று கன்னியாஸ்த்திரி மடத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டவர்களாய் அவர்கள் அவமானத்தை சுமந்துகொண்டு உயிர் வாழ்கிறார்கள். அவர்களை பலாத்காரம் செய்த இராணுவத்தினர் சிலரின் டி சர்ட் உள்ளிட்ட ஆடைகளை ஆதாரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையெல்லாம் எடுத்துக் கூறி நாங்கள் அரசியல் செய்யவில்லை. மாறாக, தமிழீழத்தில் நடைபெறும் கொடுமைகளை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். போரினால் தமிழர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டு அவர்கள் இன்று வெற்றிக் கொண்டாட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

சிங்களர்கள் குடியேற்றம்

முல்லைத் தீவு மாவட்டத்தில் கொக்கிளாயில் இருந்து சுண்டிக்குளம் வரையிலான 22 கி.மீ. கடலோர பகுதிகளில் மட்டும் 10,000 சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். எங்கள் மீனவர்களுக்கு வாழ்வற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எங்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களர்களுக்கு கொடுக்கப்படுகிறது. சிங்களர்களின் குடியேற்றத்தினால் எங்களது விகிதாச்சாரம் குறைக்கப்படுகிறது. வடக்கிலும் கிழக்கிலும் ஒரு பகுதியில் 16 ஆயிரம் பேர் வரை குடியமர்த்தப்பட்டால் அதனைக் கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்கும் வகையில் அங்கு சட்டம் உள்ளது.

நாங்கள் இனச் சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். போர் நடந்த முடிந்த பகுதிகளில் மட்டும் 89,000 பெண்கள் விதவைகளாகியுள்ளனர். இவர்களில் 50,000 பேருக்கு மேல் இளம் விதவைகள். போருக்குப் பின் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்ட பெண் போராளிகளை தென் இலங்கைக்குக் கொண்டு சென்று சிங்கள இளைஞர்களுடன் இணைத்து கருவுறச் செய்கின்றனர். அவர்கள் தமிழ் பெண்களைக் குறிவைத்தே இந்த இன அழிப்பை பெருமளவிற்கு நிகழ்த்தி வருகின்றனர்.

செஞ்சோலையின் மீது குண்டு வீசும்போது கூட, பெண்கள் இருந்த பகுதியை குறிவைத்தே குண்டுகளை வீசினர். இவை யாவும் சிறிலங்க இனவாத அரசின் திட்டமிட்ட செயலாகும்.

பொருளாதார ரீதியாக பார்த்தால், தமிழர்களை எல்லாவற்றிற்கும் கையேந்தும் இனமாக சிங்கள அரசு...

வைத்திருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு 50,000 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தருவதாக இந்தியா உறுதியளித்தது. ஆனால் ஒன்றும் நிகழவில்லை. தமிழர்களுக்கு வீடுகளை கட்டித் தருவதாக இருந்தால் அதனை இந்தியாவே முன்னின்று செய்ய வேண்டும். சிங்கள அரசிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தால் தமிழர்களுக்கு ஒரு வீடு கூட கிடைக்காது. நாங்கள் எங்களுடைய உரிமைகள் பற்றிப் பேசினால் அவர்கள் துப்பாக்கியால் பேசுகிறார்கள்.

எங்களது அரசியல் உரிமைப் போராட்டம் 22 நாடுகளின் ஆதரவோடும், பலத்தோடும் நசுக்கப்பட்டது. ஆயினும் எங்களது தலைவர் வருவார், என்றேனும் புலிகள் வருவார்கள் என்று எங்கள் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் கேட்பதென்ன? எங்கள் தலைவர்களான ஜி.ஜி.பொன்னம்பலம், திருச்செல்வம், நாகநாதன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தார்கள். ஈழத் தந்தை செல்வா அவர்கள் எதைக் கேட்டார்களோ அதைத்தான் பிரபாகரனும் கேட்டார். இன்றைக்கு எங்கள் போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளது, ஆனால் இலட்சியம் மெளனிக்கப்படவில்லை. எங்கள் இலட்சியம் வெல்லும். ஏனெனில் நாங்கள் கேட்டதும், கேட்டுக்கொண்டிருப்பதும் நிம்மதியான வாழ்விற்கானத் தீர்வுதான்.

தமிழர்கள் வாழ்ந்துவரும் பூமி இன்று இருண்டு கிடக்கிறது. எங்களையெல்லாம் துரத்தித் துரத்திச் சுடுகிறான். எங்கள் பூமியில் 100 மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம் உள்ளது. அங்கு சிவில் நிர்வாகம் இல்லை, எல்லாம் இராணுவம்தான். தமிழர் நிலத்தில் இராணுவ ஆட்சிதான் நடக்கிறது.

எங்களது பூமியில் இன்று சாலை போடும் பணியில் சீன நாட்டு கைதிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். புகழ்பெற்ற முருகண்டி பிள்ளையார் கோயில் முன்பு இருந்த திடல் இன்று இராணுவ முகாமாக மாற்றப்பட்டுவிட்டது. கொக்காவில் எனும் இடத்தில் மட்டும் 4 ஆயிரம் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அதற்காகத்தான் சமீபத்தில் அங்கு ராஜபகச வந்துள்ளார். இப்படித்தான் தமிழீழ பூமி இன்று ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ளது.

பிரபாகரன் வந்து சாட்சியமளிப்பார்

போர்க் குற்றம் பற்றி விசாரணை நடத்துங்கள். புலிகளும் போர்க் குற்றம் புரிந்துள்ளனர் என்று ஐ.நா.அறிக்கை கூறுகிறது. நாங்கள் அதனை மறுக்கவில்லை. விசாரணையை நடந்துங்கள். புலிகளின் மீதான போர்க் குற்றச்சாற்றுகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டுமல்லவா, அப்போது பிரபாகரனை அனுமதித்துதான் ஆகவேண்டும். எங்கெங்கு யாரால் எப்படிப்பட்ட குற்றங்கள் நடந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவரும்.

சிங்கள இராணுவத்துடன் இணைந்து செயல்பட்ட ஒட்டுக்குழுக்களான கருணா, டக்ளஸ் ஆகியோர் புலிகளின் சீருடையில் வந்து எமது மக்களை சுட்டுக் கொன்ற குற்றங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளது. புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் மாவீரர்கள். போர் முடிந்து மே 21ஆம் தேதியன்று நந்திக் கடல் பகுதியில் வந்த சிங்களப் படைப் பிரிவின் மீது புதர் ஒன்றில் மறைந்திருந்த புலி ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அந்தப் புதரை நோக்கி சுட்டதில் சல்லடைத் துளையான ஒரு சிறுவன் உடல் மீட்கப்பட்டது. இதைப் பற்றிப் பேசிய மேஜர் சமரவீரா, “எப்படிப்பட்ட ஆட்களடா நீங்கள்?என்று வியந்து பேசினார்.

அப்படிப்பட்ட மாவீரர்கள் 40,000 பேர் தங்கள் இன்னுயிரை ஆகுதி செய்துள்ளனர். அவர்களுடைய ஆத்மாக்கள் எங்களை வழிநடத்துகிறது. நாங்கள் எங்கள் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்போம், அதற்கு தாய் தமிழகம் எங்களுக்கு இப்போதுபோல் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்”.

Share this Story:

Follow Webdunia tamil